Monday, July 26, 2010

Tamil Short Story - Sundaramurthy

This story is the tamil version of the short story  Rakesh  Nath 's  Recovery  by  my  sister Sundari  Venkatraman

சிறுகதை

சுந்தரமூர்த்தி

மனைவி லலிதாவும், மகன் வினித்தும் அறையைவிட்டு ஓடுவதைப் பார்த்து எழுந்து உட்கார்ந்தார் சுந்தரமூர்த்தி. காலை எடுத்து கீழே வைத்துப் பார்த்தார். உடல் நிலை சரியாகி விட்டதாகத் தோன்றவே இரண்டு அடி எடுத்து வைத்தார். அப்பா, மூன்று மாதமாக பட்டபாடு முடிந்ததா என்றிருந்தது. வெளியே வந்துப்பார்த்தால், யாரையும் காணும்! ஆஸ்பத்திரி  ரிசெப்ஷன் அருகில் நிறைய நடமாட்டம் இருந்த போதும் யாரும் இவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சுந்தரமூர்த்தியும்
யாரும் அடையாளம் கண்டு தன்னை நிறுத்திவிடக்கூடாதென்று தலை நிமிர்ந்து பார்க்காமல் ரிசெப்ஷனை விட்டு வெளியே வந்தார். ஆஹா, என்ன சுதந்திரம் என்று காற்றை சுவாசித்தார். சும்மாவா   பின்னே? கிட்டதட்ட மூன்று மாதங்களாக இந்த ஆஸ்பத்திரி சிறையில் அடைப்பட்டுக்கிடந்தார். ஆஸ்பத்திரி வாசலில் இருந்த பூச்செடிகளும், மரங்களும் அவர் கண்களைக் கவர்ந்தன. இதுநாள் வரை தன்னை சுற்றி இருக்கும் எதையும் ரசிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்துவிட்டார். அவர் தொழில் அப்படி!


ஏழ்மையான குடும்பத்தில் பத்து பேருடன் பிறந்தவர், வீட்டில் அப்பா, அம்மா, தாத்தாவும் சேர்த்து பதினான்கு பேர் அவரை நம்பி இருந்தனர். சிறுவயதின் கடும் உழைப்பினால் பெற்றவர்களுக்கு சீக்கிரம் முதுமை வந்துவிட்டது. வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கான்வென்ட் பள்ளிக்கு மடிப்பு கலையாத யூனிபாரம் அணிந்து பளபளவேனும் காலணிகளுடன் தன் வயதுள்ள சிறுவர்கள் போவதைப் பார்த்து பல நாட்கள் ஏங்கியதுண்டு. பணக்காரக் கார்கள் வீட்டைக் கடந்து போவது கண்டு ஆசைப்பட்டதுண்டு. அப்போது மனதில் முடிவெடுத்ததுதான், தானும் இதையெல்லாம் வாழ்க்கையில் சாதிப்பேனென்று!  இது நடந்து 45 வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது சுந்தரமூர்த்தியின் பெற்றோர் ஒரு பெரிய பிளாட்டில் வசிக்கின்றனர். கூடப்பிறந்தோரின் வசதிக்கும் குறைவில்லை. எல்லாம் சுந்தரமூர்த்தியின்  உழைப்பால்தான். உழைத்து உழைத்து தனது 57வது பிறந்த நாளுக்கு முன்னாள் ஹார்ட் அட்டாக் என்று படுத்துவிட்டார். மூன்று மாதங்களாக ஆஸ்பத்திரி வாசம்தான். வெளியுலகமே காணவில்லை. ஆஸ்பத்திரியின் பசுமை கண்களுக்கு மிகவும் சுகமாக இருந்தது அந்த பசுமையை ரசித்தார், பூக்களில் வந்து உட்கார்ந்த பட்டாம்பூச்சியை ரசித்தார், மரங்களுக்கிடையே கண்ணாம்பூச்சி காட்டிய சூரியனை ரசித்தார். நிமிர்ந்து பார்த்தால் தான் ஆஸ்பத்திரியின் வாசலுக்கு வந்துவிட்டதை உணர்ந்தார். ஆச்சிரியம்! டாக்டரோ, நர்சோ, ஒரு வாட்ச்மேன் கூட தொடர்ந்து வரக்காணோம். கேட்டைத்தாண்டிய சுந்தரமூர்த்திக்கு துள்ளிகுதிக்க வேண்டும்போல் இருந்தது. தன்னையே ஒருமுறைப் பார்த்துக்கொண்டார். மூன்று மாதத்தில் மிகவும் மெலிந்து போயிருந்தார். காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால் தன்னை தள்ளிவிடுமோ என்றுத் தோன்றுமளவுக்கு இளைத்திருந்தார். சிரித்தபடியே எதிரிலிருந்த மணிகூண்டைப்பார்த்தால், 6.25 என்றுக் காட்டியது. சூரியன் அஸ்தமித்திருந்தபடியால் மாலை 6.25 ஆகத்தான் இருக்கமுடியும். இருட்டிவிடுமே, திரும்பப் போய்விடலாமா என்று கேட்ட மனதை அடக்கினார். இன்னும் கொஞ்ச நேரமாவது இந்த சுதந்திரத்தை அனுபவிக்கலாம் என்று தோன்றியது. ரோட்டை கிராஸ் செய்தார். " என்ன கார் ஓட்டுகிறார்கள், ஒரு ஆள் வருவது கூடவா தெரியவில்லை?" நல்லவேளை, அவர் வேகமாக நடந்ததால் தப்பித்தார்! எத்தனைக்கடைகள்? சிறுவயதில் கையில் பணமில்லாதபோது இப்படித்தான் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று பார்த்தது நினைவுக்கு வந்தது. பணம் வந்தபின் இந்த கடைகளுக்கு வர நேரமேயிருந்ததில்லை. இப்போது பார்க்கலாம் என்று தோன்றவே, ஒவ்வொரு கடையாகக் கடந்து சென்றார். பெரிய எலக்ட்ரானிக்ஸ்  ஷோரூம், பல வகை டைல்ஸ் உள்ள கடை, அடுத்து பல வெளிநாட்டு வாட்ச்கள் கடையின் ஷோகேசை அலங்கரித்தன. பர்சை எடுக்கலாமென்று பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டால், தான் அணிந்திருப்பது ஆஸ்பத்திரி ஆடைகள் என்று தெரிந்தது. தன்னிடம் கிரடிட் கார்ட், பர்ஸ், ஏன் ஒரு ரூபாய் கூட இல்லை என்று உணர்ந்தபோது சிரிப்பு வந்தது. பரவாயில்லை, இப்படி சுதந்திரமாகத் திரிவது எவ்வளவு பெரிய விஷயம். வேண்டியதை எப்ப வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்தக் கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்வதிலும் ஒரு த்ரில் என்றுத் தொடர்ந்து நடந்தார். அடுத்தக் கடை ஒரு தரமான பெயர் போன ஸ்வீட் கடை, கூடம் நிரம்பி வழிந்தது, அடுத்து ஒரு நகைக்கடை என்று கடந்து சென்றபடியே இருந்தார்.நேரம் போவதே தெரியாமல் நடந்தவருக்கு திடீரென்று கடைகளின் விளக்குகள் அணைக்கப்படவே இரவு நேரமாகிவிட்டதை உணர்ந்தார். பல உயர்ரக கடைகள் உள்ள அந்த பகுதியில் கடைகள் இரவு பதினோரு மணிக்குத்தான் மூடப்படும். அப்படியானால் அவ்வளவு மணியாகிவிட்டதா? திரும்பிப்பார்த்தால் தான் வெகுதூரம் வெகுநேரமாக நடந்து வந்திருப்பது தெரிந்தது. ஆச்சிரியமாக உடலில் வலியேயில்லை. பார்க்கப்போனால் ரொம்ப சுகமாக இருந்தது. இன்னும் நடந்தார். தான் சிறுவயதில் சுற்றிய இடமெல்லாம் சென்றுப்பார்த்தார் விடியும் நேரம் ஆகிவிட்டது. இப்போது என்ன செய்யலாம்? திரும்ப ஆஸ்பத்திரி போகலாமா? டாக்டரை வீட்டிற்கு வரச்சொல்லலாம், அவர் வந்து "நீங்க பர்பெக்ட் ஃபிட்" ன்னு சொல்வார். வீட்டின் திசையில் நடந்தார்.


அடையாரில் அவர் பங்களா இருக்கும் தெருவிலே பல கார்கள் நின்றன. வேகமாக நடந்தார். உடல் பறப்பதுப்போல் இருந்தது. சும்மாவா, கிட்டதட்ட 12 மணி நேரமாக நடந்தால் டயர்டா இருக்காதா? வீடு கேட் பெரிதாக திறந்திருந்தது. நிறைய மனிதர் நடமாட்டமும் இருந்தது. "யாருக்காவது உடம்பு சரி இல்லையா?  நான்தானே இத்தனை நாள் உடம்பாய் படுத்திருந்தேன், குடும்பத்தில் மற்றவரெல்லாம் நன்றாயிருந்தார்களே" யோசித்தார். "லலிதா, லலிதா" என்று மனைவியை அழைத்தபடியே ஹாலுக்கு சென்றார். யாரும் அவர் குரலைக் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. என்ன ஆச்சு ஹாலின் நடுவே வந்ததும் ஷாக் அடித்தாற் போல் நின்றுவிட்டார். நடு ஹாலில், இறந்தவர் உடலை வைக்கும் ஒரு ஃப்ரீசர் பாக்ஸ் இருந்தது. "யார் இறந்து விட்டார்?, அப்பாவா? அம்மாவா? ஏன் யாரும் என்னிடம் சொல்லவில்லை? நான் தாங்கமாட்டேன் என்று நினைத்தார்களா?" புலம்பியபடியே மனைவியைத்தேடினார். மனைவி கண்ணிலேயே படவில்லை. ஒருவேளை, ஒருவேளை, லலிதாதான் இறந்துவிட்டாளா? மெதுவாக ஃப்ரீசர் பாக்ஸ் அருகில் சென்று எட்டிப்பார்த்தார். "ஆ!, இது எப்படி முடியும், நான் எப்படி இந்தப் பெட்டியில்? நான் இங்கே நின்றுகொண்டிருக்கிறேனே, யாருக்கோ பைத்தியம்! லலிதா" என்று அலறினார். ஹால் முழுவதும் சுந்தரமூர்த்தியின் குரல் எதிரொலிக்க, ஃப்ரீசர் பாக்ஸ் மேலிருந்தக்கண்ணாடியை தள்ளிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார். தள்ளிய வேகத்தில் கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியது. பூஜையறையிலிருந்து அழுதழுது சிவந்து வீங்கிய கண்களுடன் ஓடி வந்தாள் லலிதா. ஹாலின் ஓரங்கள் மற்றும் தோட்டத்திலும் நின்றிருந்த உறவுக்காரர்களும் நண்பர்களும் சுந்தரமூர்த்தி  குரல் கேட்டு ஓடி வந்தனர். ஹாலின் ஒரு மூலையில் பெரும் சோகத்தில் இருந்த சுந்தரமூர்த்தியின் பெற்றோர் அதிர்ந்து எழுந்தனர் நேற்று மாலை இறந்து விட்டதாக எண்ணியிருந்த தங்கள் அருமை மகன் குரல் கேட்டு! கூடியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி, சிலரது முகத்தில் பயமும் கூட! திடீரென உடல் முழுவதும் வலியை உணர்ந்தார் சுந்தரமூர்த்தி. 12 மணி நேரமாக இல்லாத வலி அனைத்தும் வந்துவிட்டிருந்தது.


என்ன நடந்தது? வந்த அனைவரும் கிளம்பியபின் லலிதாவும் வினித்தும் ஆஸ்பத்திரியில் நடந்ததை மாறி மாறி சுந்தரமூர்த்திக்கு விளக்கினர்.

ஆஸ்பத்திரியில் சுந்தரமூர்த்தியுடன் இருந்த லலிதாவும் வினித்தும் ஹார்ட் மானிட்டரில் மாற்றம் தெரிந்ததும், அவசரமாக டாக்டரை கூப்பிட சென்றனர். டாக்டர் வந்துப் பார்த்து 5 .45 மணிக்கு சுந்தரமூர்த்தி இறந்து விட்டார் என்றார். சுந்தரமூர்த்தியின் ஆத்மா சுதந்திரமாக ஊரைச் சுற்றிவந்தது. அவரது ஆத்மா மீண்டும்  உடலில் சேரும்போது அவரது உடலும் முழு நலம் பெற்றுவிட்டது.

இதுவரை சுந்தரமூர்த்தி எப்படி பிழைத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை! லலிதா பூஜையறையில் இருந்த மகாகணபதியைப் பார்த்து புன்னகைத்தாள். அவள் கணபதியின் மேல் வைத்த நம்பிக்கை என்றும் வீண்போனதில்லை!

11 comments:

 1. Very nice and gripping narration in Tamil.Both Talent I think is running in the family with both sisters writing well

  ReplyDelete
 2. @KParthasarathi - thank you very much for your comments

  ReplyDelete
 3. Kickass! Excellent translation and perfect pics! In fact, they make sure that one cannot have a clue to what's actually happening. The first one especially, I felt I was Sundaramurthy walking on the street and the picture is from my viewpoint. :)

  ReplyDelete
 4. அழகாக தமிழில் எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
  ப. சந்திரசேகரன்

  ReplyDelete
 5. A GOOD SHORT STORY. WELL DONE. CONGRATS!

  ReplyDelete
 6. unume puriyalay :)

  ReplyDelete
 7. La
  Excellent
  very good work
  keep it up

  ReplyDelete
 8. It is a excellent short story. Good writing skills. Keep writing and send the link.

  I would like to know how you got my email id?

  With Warm Regards,
  Nagarajan

  ReplyDelete
 9. Good to read your kadai,very well conceived & written,keep it up.Saw the photos of lord Muruga.Thanks for forwording.

  Love,
  Savithri J Rao.

  ReplyDelete
 10. ஆஸ்ப‌த்திரியில் ஆட்க‌ள் இல்லையென துவ‌ங்கும் போது
  புரிந்து விட்ட‌து. ஆனால் பிஃரீஷ‌ரில் புகுந்து த‌ள்ளி உடைத்து
  மீண்டு வ‌ருவ‌து கொஞ்ச‌ம் வ‌ழித‌ல் ஹா..ஹா..
  ஹாலில் புருஷ‌ன் பிணத்தை விட்டுட்டு, வீட்டுக்குள் க‌ண‌ப‌தியை
  கும்பிட்டுக் கொண்டு ம‌ணைவி ல‌லிதா இருந்தார் என்ப‌தெல்லாம்...
  த‌ங்கை க‌தைக்கு த‌மிழ் மொழிபெய‌ர்ப்பு எனப்பார்த்தால்,
  உங்க‌ள் எழுத்து நடை, ஓடை போல் சர‌‌ள‌மாய் ப‌ய‌ணிக்கிற‌து.
  வாழ்த்துக்க‌ள் Ms.Lakshmi Ranganathan ‌

  ReplyDelete
 11. Great Lakshmi, very good imagination. People are used to thinking in a particular way and expect the same in every story. I am happy you are writing differently. Going towards the Golden Age, indeed, with such stories!

  Your family is indeed full of writers! Looking at you people, sometimes, I also feel like writing stories

  ReplyDelete